உள்ளூர் செய்திகள்

கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க முடிவு

Published On 2022-06-16 10:10 GMT   |   Update On 2022-06-16 10:10 GMT
  • திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • பரிசோதனை கூடத்தில் தயாராக உள்ள 4 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும்

திருச்சி:

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

திருச்சியில் தினசரி பரிசோதனைகள் ஒன்று அல்லது இரண்டு பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 7 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் வைரசுக்கு நேற்று முன்தினம் பலியாகியுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் காரணத்தினால் அங்கு பரிசோதனைகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பாதிப்பு வேகமெடுத்து உள்ளதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி திருச்சி மருத்துவக் கல்லூரி புதிய டீன் நேரு என்று கூறும் போது, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை சார்பில், இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 57 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை கூடத்தில் 4 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும்.

தற்போது வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு மட்டும் 500 முதல் 600 பேருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

சென்னையைப் போன்று திருச்சியில் இதுவரை குறிப்பிட்ட பகுதியில் அதிகம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தேவைப்பட்டால் தினசரி பரிசோதனை அதிகரிக்கப்படும் என்றார்.


Tags:    

Similar News