உள்ளூர் செய்திகள் (District)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

Published On 2023-04-10 09:24 GMT   |   Update On 2023-04-10 09:24 GMT
  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • வருகிற 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

திருச்சி:

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (11-ந்தேதி) அதிகாலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா வைபவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து , அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய தினம் முதல் அடுத்து வரும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்திரை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக அரசு அறிவிக்கும் வழி நெறிமுறைகளை பயன்படுத்தி சித்திரை தேர் திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.


Tags:    

Similar News