திருச்சியில் புதிதாக மின் தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- திருச்சி மாநகராட்சி 2 இடங்களில் புதிதாக மின் தகனமேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
- சுடுகாட்டில் எரியும் பிணங்களில் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து காற்றை மாசுபடுத்தும். மேலும் அதிகமான பொது மக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். தொடர்ந்து சுகாதாரம் பாதிக்கும்
திருச்சி:
திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒருசில திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சில திட்டங்கள் பொதுமக்களின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் மாநகர பகுதிகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் திருச்சி பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் பகுதிகளில் எரியூட்டும் மையம் அதாவது சுடுகாடு அமைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த திட்டமானது தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.
அதற்காக பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது பஞ்சப்பூர் பகுதி பொது மக்கள் எங்கள் பகுதியில் எரியூட்டும் மையமான சுடுகாடு அமைக்க வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், ஏற்கனவே பஞ்சப்பூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது.
அதன் மூலமாகவே ஒரு சிலர் பாதிப்படைகிறார்கள். இந்தநிலையில் எரியூட்டும் மையமான சுடுகாடு பஞ்சப்பூரில் அமைத்தால் அந்த பகுதியில் முதலில் சுகாதாரம் சீர்கேடு நடக்கும்.
பின்னர் சுடுகாட்டில் எரியும் பிணங்களில் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து காற்றை மாசுபடுத்தும். மேலும் அதிகமான பொது மக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். தொடர்ந்து சுகாதாரம் பாதிக்கும். ஆகவே எங்கள் பகுதியில் புதிதாக எரியூட்டும் மையம் அமைக்க வேண்டாம் என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, திருச்சி மாநகர் பகுதியில் தற்போது ஓயாமாரி, கோணக்கரை, கருமண்டபம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 இடங்களில் எரியூட்டும் மையங்கள் செயல்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 உயிரிழப்புகள் எற்பட்டு தகனம் செய்வதற்காக வருகிறார்கள்.
இதனால் இடப்பற்றாக்குறையும், எரியூட்ட தாமதமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் புதிதாக பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் சுடுகாடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. மேலும் பஞ்சப்பூர் பொது மக்கள் இதற்கு அச்சப்பட வேண்டாம்.
எதிர்ப்பு தெரிவிக்கவும் வேண்டாம் என அவர்களுக்கு புரியும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தையும் அவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.