மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள்
- திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்
- இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி உள்ளிட்ட 5 பேர் தங்கம் வென்றனர்
திருச்சி:
திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. குமரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த 350 சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் ஆசான் சீனிவாசன் தலைமையில் 9 சிலம்பம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
5 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரிவினரும், 13 வயது முதல் 17 வயது வரை ஒரு பிரிவினரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி, நந்தன ராஜேஷ், ரித்திகா காந்தி, மாதவன், சண்முக பிரியன், மலரவன், ஷாமினி பிரியா, அர்ச்சனா ஆகியோரில் 5 பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றனர்.
4 பேர் 2-ம் பரிசாக வெள்ளிப் பதக்கமும், 9 பேர் 3-ம் பரிசாக வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.
சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேசன் ஆசான் சீனிவாசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது.