சுனாமி தாக்கிய 19-வது நினைவு தினம்: வங்கக்கடலோரம் மலர்தூவி அஞ்சலி
- சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம்.
- சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.
தமிழ்நாட்டின் கிழக்கு பகுதி எல்லையாக வங்கக் கடலோரம் விளங்கி வருகிறது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கரையோர பகுதியில் 13 மாவட்டங்களும், 561 மீன்பிடி கிராமங்களும் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மீனவ மக்களுக்கு தொழில் தருவது கடல், பொழுதுபோக்கு இடமாக அமைவது கடற்கரை. அலையோடு விளையாடியே பழக்கப்பட்ட அவர்களுக்கு, கடற்கரை வரை வந்து முத்தமிடும் அலைகள், நம் வீட்டு முற்றம் வரை வந்து மிரட்டும் என்று உணர்த்திய ஆண்டு 2004.
19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் ஆர்ப்பரித்து எழுந்து 14 நாடுகளின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது.
"உலகம்தான் அழிகிறதோ?" என்ற மரண பயத்தில் உயிர் பிழைக்க ஓடிய மக்களையும் தயவுதாட்சண்யம் இன்றி சுனாமி அரக்கன் வாரிச் சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் வசித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்து போனார்கள். 43 ஆயிரத்து 786 பேர் இன்றுவரை காணவில்லை.
தமிழகத்திலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். பொருட்சேதமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்பட்டது.
சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம். கடற்கரையோரம் அன்றைக்கு எழுந்த மரண ஓலம், அலைகளின் ஓசையையே அடங்கச் செய்துவிட்டது. சுனாமிக்கு இரையான கட்டிடங்கள், சுவடுகளாக இன்னும் பல இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன.
சுனாமிக்கு முன்னால் எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் காதல் மனம் வீசியது. ஆனால், சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.
இன்றைக்கு வங்கக் கடற்கரையோர கிராமங்களில், சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று மறைந்தவர்களை மனதில் நினைத்து, கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அலைகள் ஓய்வதில்லை. அதுபோல், சுனாமி நினைவுகளும் ஓயப்போவதில்லை. காலங்கள் கடந்தாலும் நினைவுகள் தொடரும்.