உள்ளூர் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-05-27 03:47 GMT   |   Update On 2023-05-27 03:48 GMT
  • முத்தமிழ்செல்வி கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார்.
  • முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ''ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்'' மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார்.

நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.

இவர் கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19-ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075அடி 6119 மீட்டர் உயரம்) அடைந்தார். மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28-3-2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்நிலையில், சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News