உள்ளூர் செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் பறிமுதல்

Published On 2024-08-07 05:15 GMT   |   Update On 2024-08-07 05:15 GMT
  • பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
  • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சப்ரிஜிஸ்டராக அருணா என்பவர் உள்ளார்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி மற்றும் போலீசார் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர் அலுவலகத்தின் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என கூறி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளிநபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.

அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் சோதனை செய்தனர். இரவில் 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது நள்ளிரவையும் தாண்டி இன்று காலையும் நீடித்தது. இன்று காலை 7.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையானது நிறைவடைந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை மேற்கொண்டதில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை கேட்டு, அலுவலகத்தில் இருந்த சப்ரிஜிஸ்டரிம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து இன்று காலை சோதனையை முடித்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இன்று காலை அவர் ஆஜரானதும், மீண்டும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News