மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் தீவிரம்
- நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
சேலம்:
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. இதனால் மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில் தொடங்கி, மழைக்காலம் வரை நீர் சேமிப்பு பணிகள் நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தாலுகாக்களில்...
நாடு முழுவதும் 225 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 225 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 225 மாவட்டங்களிலும் 1592 தாலுகாக்களில் இந்த திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வறட்சி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், நீர்வளத்துறை பொறி யாளர்கள், அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்மேலாண்மை குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள், குளங்கள், பொது மற்றும் தனியார் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பான திறந்தவெளி கிணறுகள், பாரம்பரிய நீர்நிலைகள் தொடர்பான பணிகள், மறு பயன்பாட்டுக்குரிய நீர் கட்டமைப்புகள், நீர்வள ஆதாரம் தொடர்பான கசிவு நீர் குட்டைகள், அகழிகள், அடர்வன காடுகளில் மரக்கன்றுகள் நடுதல், நர்சரிகளை பராமரித்தல், அமிர்த குளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய்களில் நீர்கால் பகுதியை கண்டறியப்படுகிறது. அந்த பகுதியில் மீள்நிரப்பு புழை அமைக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் குளங்களை சீரமைக்கும்போது கரைகளை மிகவும் உறுதித்தன்மை கொண்டதாகவும் பலப்படுத்த வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விளை நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்த்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.