உள்ளூர் செய்திகள் (District)

வேதாரண்யம் கடற்பகுதியில் இலங்கையை சேர்ந்த படகு மீட்பு- போலீசார் விசாரணை

Published On 2024-07-06 04:50 GMT   |   Update On 2024-07-06 04:50 GMT
  • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன் (30), ராஜதுரை (28), ராமநாதன் (38), புகழ்ராஜ் (28), ராம பெருமாள் (26), ராமன் (26) மற்றும் பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கிய ராஜ் (26) ஆகிய 8 மீனவர்களும், ராமானுஜத்திற்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போது அனைவரும் சிறுதலைக்காட்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. அதனை கண்ட அவர்கள் உடனடியாக தங்களது படகில் கட்டி இழுத்து நள்ளிரவு கரைக்கு வந்தனர்.

பின்னர், இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படகை கைப்பற்றி அதில் சோதனை செய்தனர். அப்போது படகில் TRB-A-1260 JFN என்றும், இரு பக்கத்திலும் Y.S.S merini என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்த படகு நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்த படகில் என்ஜின் மற்றும் வலைகள் ஏதும் இல்லை.

படகில் எழுதப்பட்ட படகின் எண் மற்றும் அதன் தோற்றத்தை வைத்து, அது இலங்கை நாட்டை சேர்ந்த படகு என்றும், இது கரை ஒரத்தில் மீன் பிடிக்கும் படகு என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படகு கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தியதா? வேறு யாரும் இலங்கையில் இருந்து வந்தார்களா? அல்லது யாழ்ப்பாணம் பகுதியில் கரையில் இருந்த படகு காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News