நெல்லையில் கடைகளில் பாதுகாப்பாற்ற முறையில் போடப்படும் மின்விளக்குகள் - தடை செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன
- மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் திரண்டு வந்து கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
அலங்கார விளக்குகள்
நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தின் தலைவர் முகமது அய்யூப் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாலையோர கடைகளும் அடங்கும். இந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் சிறிய அளவிலான அலங்கார மின்விளக்கு சரங்களை அமைத்துள்ளனர்.
இவற்றை முறையாக வயரிங் செய்து அமைக்காமல், தற்காலிகமாக தள்ளுவண்டிகளிலும், கடைகளுக்கு வெளியே மரங்கள், இரும்பு பைப்புகளிலும் சுற்றி அமைத்துள்ளனர். இந்த மின் விளக்குகளின் வயர்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்.
சில நேரங்களில் அந்த வயர்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கசிவு ஏற்பட்டாலோ பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் இதுபோன்ற மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இடைநிற்றல் ஊக்கத்தொகை
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உத்திரநாயகம் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாளையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 141 பேருக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களள் அலட்சியமாக இருந்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.