மழை முற்றிலும் ஓய்ந்தது முழு கொள்ளளவில் நீடிக்கும் வைகை, மஞ்சளாறு அணைகள்
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது.
கூடலூர்:
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் பெய்த தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. மேலும் பெரும்பாலான குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
வைகை, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது. 2031 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 55 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடித்து வருகிறது. 92 கனஅடி நீர் வருகிற நிலையில் அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.70 அடியாக உள்ளது. 1117 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.