தீபாவளி கொண்டாட்டத்தில் 175 பேர் படுகாயம்
- பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை
- தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
வேலூர்:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழக அரசு அறிவுறுத்தல் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து பண்டிகையை உற்சா கத்துடன் கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்துகளை தடுக்க வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் 24 மணி நேரம் வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தீயணைப்பு வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டத்தில் 7 மாவட்டங்களில் இருந்து 24 அழைப்புகள் வந்தன.
இதில், 15 ராக்கெட் பட்டாசு, 9 பிற பட்டாசுகள் என சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன.
பட்டாசு வெடித்ததில் 86 ஆண்கள், 84 பெண்கள், 5 குழந்தைகள் என 175 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்த சிறுமி நவிஷ்கா (4) பரிதாபமாக உயிரிழிந்தார். பெரிய அளவிலான தீ விபத்து, படுகாயம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.