உள்ளூர் செய்திகள் (District)

பால் வியாபாரி வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் அபேஸ்

Published On 2023-02-17 10:32 GMT   |   Update On 2023-02-17 10:32 GMT
  • செல்போன் மூலம் நூதனமாக கைவரிசை
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பரணி(64), இவர் தனது மகனுடன் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்து விட்டு பணத்தை ஒடுகத்தூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தனது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

பின்னர், வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் பரணியிடம் தங்களது ஏடிஎம் மற்றும் வங்கி கணக்கு புதுப்பிக்க வேண்டும் அதற்கு உங்கள் செல்போனுக்கு ஓடிபி (கடவுச்சொல்), ஒன்று வரும் அதை என்னிடம் கூறுங்கள், ஏடிஎம் மற்றும் வங்கி கணக்கு புதுப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது செல்போனுக்கு ஒரு எண் வந்துள்ளது.

இதனை உண்மை என்று நம்பிய பரணி தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை அந்த மர்ம நபரிடம் கூறியுள்ளார். பின்னர், உடனே பால் வியாபாரி பரணியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதையடுத்து தான் ஏமாத்தப்பட்டதை உணர்ந்த அவர் வங்கிக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் இதற்கும் வங்கிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, பரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேப்பங்குப்பம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News