உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர், சேலம் பஸ்கள் இயக்கம்

Published On 2022-09-07 09:31 GMT   |   Update On 2022-09-07 09:31 GMT
  • கடைகள் இல்லாமல் திண்டாட்டம்
  • மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்துவதாக புகார்

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம், திருத்தணி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவதாகவும் பொருட்களை சேதப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.

இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது. அதை மாற்றவும் தெர்மல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை முதல் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.ஜி.எப், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், சித்தூர், திருப்பதி ஆகிய மார்க்கங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்ததால் வெறிச்சோடி கிடந்த புதிய பஸ் நிலையம் இன்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.

புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் குடிநீர், டீ, காபி, பிஸ்கட், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆரணி, திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News