தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- நல்லது நடக்கும் என மனு கொடுக்கிறார்கள்
- மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளருமான மு.பாபு வரவேற்று பேசினார்.
வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, ஆர்.கே.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 200 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி, 150 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், 100 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், 100 நாவிதர்களுக்கு சலூன்கிட், 25 ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ, 150 கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அணைக்கட்டு தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முகம் தான். என் மீது அதிக பாசம் கொண்டவர். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞருடன் பயணித்தவர். தற்போது அவர் முதல்-அமைச்சருக்கு துணையாகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
60 ஆண்டு கால உழைப்புக்கு சொந்தக்காரர். இந்த மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் அமைச்சர் துரைமுருகன். என்னை தூக்கி வளர்த்தவர் அவர். இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லையென்றாலும் அவருடைய மனம் முழுவதும் இதை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கும்.
முதல் பிரசார சுற்றுப்பயணம்
வேலூர் மாவட்டத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும் முன்பே என்னுடைய முதல் பிரசார சுற்றுப்பயணம் வேலூர் மாவட்டத்தில் தான் தொடங்கியது.
நான் வாக்கு சேகரித்த முதல் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த். அதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இந்த மாவட்டத்துக்கு வந்து அனைத்து தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறினேன்.
ஆனால் இங்கு வந்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது பொற்கிழி மட்டும் அல்லாமல் தையல் எந்திரம், சலவைபெட்டி, ஆட்டோ, விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏ.பி..நந்தகுமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. எப்போதும் சுறுசுறுப்பா கவும், பரபரப்பாகவும் காணப்ப டுவார். அதேவே கத்தில் இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதியில் அணை கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன்படி அணைக்கட்டு தொகுதியில் ரூ.50 கோடி செலவில் அணை கட்டி தரப்படும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது நல்ல எண்ணம் உள்ளது.
பொதுமக்கள் மனு அளித்தால் நல்லது நடக்கும். நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை தொடரும். தமிழகத்தில் நல்ல ஆட்சியை முதல்-அமைச்சர் கொடுத்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து1¼ ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
நான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இங்கு பொற்கிழி பெற்ற கட்சியின் முன்னோடிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்திருக்க கூடும். நான் இவர்கள் அனைவரையும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக பார்க்கிறேன். அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி செல்பி எடுக்க வேண்டும் என ஆசை தான் ஆனால் நேரம் போதவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.