சுகாதார குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
- சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எச்சரிக்கை
வேலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.
பருவமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து காக்கவும், அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழைகாலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால், ஆஸ்பத்திரி வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும் முக்கியம். புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.
அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சுகாதார குழுக்களையும் அமைக்க வேண்டும்.
மருத்துவக் கட் டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற் கொள்ள வேண்டும்.
பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.