100 மரக்கன்றுகளை நட்ட புதுமண தம்பதி
- பொதுமக்கள் பாராட்டு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் வினோத்குமார் (வயது 30) இவருக்ககும் லேகாஸ்ரீ என்பவருக்கும் நேற்று காலையில் பள்ளிகொண்டாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்த இளைஞரான புது மாப்பிள்ளை வினோத்குமார் தனது திருமணத்தின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி தான் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
நேற்று திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வினோத்குமார்-லேகா ஸ்ரீ ஆகியோர் அவர்கள் வசிக்கும் விநாயகபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியகுழு துணை தலைவர் அருண்முரளி, கே. வி.குப்பம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சீதாராமன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
மரக்கன்றுகளை நட்ட புதுமண தம்பதிகளை அப்பகுதி பொதுமக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வெகுவாக பாராட்டினர்.