வேலூரில் 6 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு
- 6 ஆயிரம் பேர் எழுதினர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 40 கிராம உதவியாளர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது. 40 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 6000 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.
வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம், குடியாத்தம் கே. எம். ஜி கல்லூரி, கே.வி.குப்பம் வித்யா லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் இன்று எழுத்து தேர்வு நடந்தது.
இன்று காலை 9:30 மணிக்குள் வந்த தேர்வர்கள் மட்டும் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பினார். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்பு அனுப்பி வைத்தனர்.
அவர்களிடம் இருந்த செல்போன் புத்தக மற்றும் மின்னணு சாதகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்தனர்.தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.