உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

Published On 2024-09-22 08:58 GMT   |   Update On 2024-09-22 08:58 GMT
  • மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.
  • மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும்.

கோவை:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை த.வெ.க நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.


இந்த நிலையில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மாநில மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் பரபரப்பான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமையின் சார்பில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டியில் த.வெ.க தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் அதில் விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

கோவையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்கின்றனர்.

திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள சுவரொட்டியில் மூன்றெழுத்தின் (ஈ.வே.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர்.,) அடுத்த அரசியல் வாரிசே. 2024-ல் எழுச்சி மாநாடு, 2026-ல் தமிழ்நாடு என்ற வாசனங்கள் இடம் பிடித்துள்ளது.

கோவை, திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கிடையே மாநாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந் தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News