தனியார் கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
- 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
- குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் மற்றும் கோபனபள்ளி பகுதியில் புதிதாக தனியார் கல்குவாரிகள் தொடங்கப்படுவது தொடர்பாக, மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஓசூர் அருகே நாகொண்டபள்ளியில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு , ஓசூர் ச.ப்- கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில், கொரட்டகிரி, தண்டரை, அடவி சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு, "ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
குடிநீர் மாசடைந்து, ஆடுமாடுகள் கூட உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. வீடுகளில் விரிசல் ஏற்படுகின்றன. குவாரிகளுக்கு சரமாரியாக வந்து செல்லும் டிப்பர் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் சாலையில் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி வழங்கினால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.
குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்ட த்தில் ஈடுபடுவோம் என்று ஆக்ரோஷத்துடன் கூறினர். மேலும், உதவி கலெக்டரிடம் உருக்கமாக முறையிட்டு, மனு வழங்கினர். இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, கோபனபள்ளி கிராமத்தில் அமையவுள்ள புதிய தனியார் கல்குவாரி தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எந்த வித எதிர்ப்புமின்றி, கோபனபள்ளி பகுதி மக்கள், புதிய கல்குவாரிக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
புதிய கல்குவாரிகள் தொடங்குவது தொடர்பான கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த சப்- கலெக்டர் சரண்யா, கிராம மக்களின் கருத்துக்கள் மற்றும் புகார்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகத்துக்கு மேல் நடவடிக்கை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.