உள்ளூர் செய்திகள்

6-வது நாளாக கிராம மக்கள் தவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி

Published On 2023-12-22 08:50 GMT   |   Update On 2023-12-22 08:50 GMT
  • ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.
  • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் 1.5 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்கத்து ஊர்களில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் தங்கியுள்ளனர்.

தற்போது வரை சில கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மூலமும் உணவு வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் சாலை வசதி துண்டாகி இருப்பதால் படகு மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மேற்கூரைகள் இல்லாமல் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. புன்னக்காயல் பகுதியில் வெள்ளம் வடிந்தாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் இன்னும் அந்த பகுதி தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது.

இதேப்போல ஏரல் பகுதியே உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கும் ஏராளமான வீடுகள் முழுமையாக இடிந்துள்ள நிலையில் இங்குள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் வெள்ளத்தில் விளைநிலங்கள் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் வெள்ளத்தில் இறந்து போனதால் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.

இதேப்போல உடமைகள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்து விட்டதால் இப்பகுதி மக்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது நிவாரண முகாம்களில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து முழுமையாக மீள்வது எப்போது என்ற கவலையில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தில் ஓடும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததால், அந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை த்துறை சார்பில் கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. இதையொட்டி வாகனங்கள் செல்ல அதன் அருகில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்த மிக கனமழையின் காரணமாக தளவாய்புரம் கால்வாயிலும் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. இந்த வெள்ளத்தால் தற்காலிக பாதை உடைந்தது. தற்போது மழை ஒய்ந்த நிலையில் தற்காலிக பாதை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. தளவாய்புரம் வழியாக களக்காடு-நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான ராஜபுதூர், ரோஸ்மியாபுரம், பணகுடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் தளவாய்புரம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. இன்று 6-வது நாளாக அங்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

எனவே தற்காலிக பாதையை சீரமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய பால கட்டுமான பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால், நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் விளைநிலங்கள் மண் மேடாக காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் தூத்துக்குடி நகர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதேப்போல தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பும் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் 6-வது நாளாக இன்று வரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News