உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடும் பெண்கள்

Published On 2023-08-14 05:52 GMT   |   Update On 2023-08-14 05:52 GMT
  • விருதுநகரில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடப்பட்டது.
  • போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், அருப்புக் கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் வெளியூர்க ளுக்கு ஏராளமானோர் அரசு பஸ்சில் வேலைக்கு சென்று வருகின்றனர். மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விருதுநகர் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் நகை, பணத்தை நைசாக திருடி செல்வது நடந்து வருகிறது.கடந்த சில மாதங்களாக இந்த சம்பவம் விருதுநகர் வழித்த டத்தில் அதிகரித்துள்ளது.

காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு திருப்பதி நகரை சேர்ந்தவர் முத்துநல்லு. இவரது மனைவி மாரித்தாய். இவர் சம்பவத்தன்று காரியா பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் மாரித்தாய் நின்று கொண்டே பயணம் செய்தார்.

அப்போது அவர் அருகே பர்தா அணிந்திருந்த2 பெண்கள் அடிக்கடி உரசியபடி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் நடுவழியில் இறங்கி விட்டனர். வீட்டிற்கு வந்த மாரித்தாய் தான் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்து 2½ பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

பஸ்சில் அவர் அருகில் நின்றிருந்த பர்தா அணிந்த பெண்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மாரித்தாய் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடியதாக கூறப்படும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் சங்கரலிங்க புரத்தை சேர்ந்த சரோஜா (75) என்ற மூதாட்டியிடம் அரசு பஸ்சில் மர்ம பெண் 3 பவுன் நகையை அபேஸ் செய்தார்.

இதே போல் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி நந்தினி (18) மாலையில் அரசு பஸ்சில் வீடு திரும்பும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் 1 பவுன் நகையை திருடி சென்றதாக புகார் வந்தது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்சில் பயணிப்போர் நகை, பணத்தை இழந்து வருவது தொடர் கதையாக உள்ளது.

குறிப்பாக விருது நகர்-அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி ஆகிய வழித்தடங்களில் மர்ம கும்பல் பயணிகளை குறி வைத்து திருட்டில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி அரசு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News