96 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி-தங்க நாணயங்கள்-அமைச்சர் வழங்கினார்
- 96 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி-தங்க நாணயங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
- தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்த 96 ஏழை பெண்களுக்கு ரூ.42 லட்சத்து 92 ஆயிரத்து 448 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் திருமண நிதியுதவிகள் என மொத்தம்; ரூ.87 லட்சத்து42 ஆயிரத்து 448 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது படித்து காவல்துறையில் பணி பெற்று, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பெண்கள் பணியாற்றி வரும் காலமாக இருக்கிறது.
போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபடுவதால், திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும். படிக்க வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை அவர்களாகவே உருவாக்கி கொள்ள முடியும். பெண்கள் கல்வி கற்பதற்கும், வாழ்வில் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து உருவாக்கி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.