- போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்துள்ளனர்.
- ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 7 ஏக்கர் 9 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்து விட்டோம்.
இந்த நிலையில் தெலுங்கானா அரசு பதிவுத்துறையில் இருந்து எங்களது நில கிரையம் தொடர்பாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் தெலுங்கானா சென்று கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.
இந்த நிலையில் மீண்டும் எனது சகோதரர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து தெலுங்கானாவில் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த தினேஷ்லிங்கத்திடம் கேட்ட போது, நிலத்தை கிரையம் செய்து தருமாறும், இல்லாவிடில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கு ரமேஷ் உள்பட 4 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.