இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி
- செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.
- செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் விஸ்வநாதன் ஆனந்த்.
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.
நிறைவு விழாவில் இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.