தனுஷ்கோடியில் சூறாவளியுடன் கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
- வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
- கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.
ராமேசுவரம்:
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்தின் தென் கடல் பகுதியில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று ஏற்படும் கடல் சீற்றமான கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலைமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் நீண்ட இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பூந்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது.
கரையோரம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.