செஞ்சி அருகே இளம்பெண் கற்பழித்து கொலை செய்து புதைக்கப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை
- கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
- இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அங்குள்ள மயான புறம்போக்கு இடத்தில் நேற்று மதியம் பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும் போது மனித உடலின் கை தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அங்கிருந்த அதிகாரியிடம் இது குறித்து கூறினர். அவர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடலை கண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாலவனூர் கிராமத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா கூறுகையில், இளம்பெண்ணை யாராவது கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 25 முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த விபரங்களை மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து பெறும் பணி நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நடந்துள்ளதா? எப்போது இந்த சம்பவம் நடந்தது என்பன போன்ற விபரங்கள் தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.