50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.