வயநாடு நிலச்சரிவு: 3 வயது குழந்தையை விட்டு விட்டு மீட்பு பணியில் ஈடுபடும் சென்னை தம்பதி
- ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.
வயநாடு:
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்களான பிரதாப்-சங்கவி தம்பதியினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது 3 வயது குழந்தையை விட்டு விட்டு ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக பிரதாப் கூறியதாவது:-
எங்கள் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே வயநாடு பகுதிக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சில வீடியோக்களை எங்களுக்கு அனுப்பினார்கள். அதில் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் வீடியோக்களும் இருந்தன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தவித்த குழந்தைகளின் வீடியோக்களை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதை உணர்ந்துதான் நாங்கள் மீட்பு பணிக்கு வந்தோம். நாங்கள் ஏற்கெனவே வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு பணிக்காக ரெயிலில் வந்தோம். இங்கு மலையில் இருப்பவர்களுக்கு தான் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டோம். எனவே நாங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றோம்.
எந்த இடத்தில் நிலச்சரிவு ஆரம்பித்ததோ அந்த இடத்தில் இருந்துதான் மீட்பு பணியை தொடங்கினோம். இன்னும் எவ்வளவு நாள் இருப்போம் என்பது தெரியாது. ஆனால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்து விட்டுதான் செல்வோம். திருமணத்துக்கு முன்பு எனது மனைவிதான் தன்னார்வலராக இருந்தார். திருமணத்துக்கு பிறகு நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதாப்பின் மனைவி சங்கவி கூறியதாவது:-
எங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அவளுக்கு 3 வயது ஆகிறது. குழந்தைகளின் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைத்தபோது மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக உடனே கிளம்பி வந்தோம். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது முதல் நான் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
தன்னார்வ தொண்டு பணியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பது எனது கணவருக்கு தெரியும். எனவே அவர் இதுவரை என்னை தடுத்தது கிடையாது. மேலும் அவரும் என்னுடன் மீட்பு பணிக்கு வர சம்மதித்தார். இதில் எனக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.