மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டத்தை தொடர்வோம் - விசைத்தறி யாளர்கள் அறிவிப்பு
- நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
- பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.
மங்கலம் :
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்த விசைத்தறிகளில் 90 சதவீதம் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி கிடைக்காமை, உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் அரசின் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரிடியாக வந்தது. இதனால் விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி அடைந்து மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிமொழி காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட விசைத்தறி யாளர்கள், மின் கட்டணத்தை குறைக்கும் வரையில் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என முடிவு செய்து, கடந்த 6 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- சாதா விசைத்தறிகளுக்கான 3 ஏ 2 டேரிப்புக்கு மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு.ஏற்கனவே தொழிலை நடத்த முடியாமல் நெருக்கடியில் உள்ளோம். அதனால் மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உத்தரவாதம் அளித்து பல மாதங்கள் ஆகிறது. இதுவரை சாதகமான அறிவிப்பு வரவில்லை. மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் மின் கட்டணம் செலுத்தாமல் எங்கள் போராட்டம் தொடரும்.
மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு விசைத்தறி கூடத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் சுமையாகும்.மின் கட்டணம் செலுத்தாத போராட்டத்துக்கு பிறகு கடந்த 6 மாதத்தில் ஒவ்வொரு குடோனுக்கும் 4 மின் கட்டண பில்கள் வந்துள்ளன. அதில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தற்போது சோமனூர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய் வரை மின் கட்டண பாக்கி உள்ளது. அதனால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.