மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - அமைச்சர் கே.என்.நேரு
- ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
தஞ்சாவூா்:
கல்லணையில் இருந்து இன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஒரு வாரத்திற்குள் கடைமடை வரை சென்றுவிடும். 7 லட்சத்து 95 ஆயிரத்து 453 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்கள், விதை நெல்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர் கடன் வழங்கப்படும். காவிரித் தண்ணீரை பயன்படுத்தி ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நாங்களும் ஒருபோதும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.