அ.தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம்-ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
- திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.
பொள்ளாச்சி
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செய லாளருமான எஸ்.பி.வேலுமணி பேசி யதாவது:-
விவசாய குடும்பத்தில் பிறந்து கடந்த 4½ ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியினை கொடுத்துள்ளார். குறிப்பாக பொள்ளாச்சிக்கு மட்டும் 1500 கோடி ரூபாய் அளவுக்கு பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க. நிறைவேற்றி கொடுத்துள்ளது.
ஆனால் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யாத ஆட்சி தான் இந்த தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியானது விளம்பர படத்தில் மட்டும் தான் இயங்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க ஒரு நாள் கூட சொத்து வரியை உயர்த்தியது இல்லை. ஆனால் இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் 25, 50, 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தி.மு.க அரசு வழங்கிய போனஸ் தான் இந்த வீட்டு வரி மற்றும் மின் கட்டண உயர்வு. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறார்கள்.
நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு சிறு துரும்பாவது இவர்கள் கொண்டு வந்துள்ளார்களா? மாறாக நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா உணவகம், அம்மா கிளினிக், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் இந்த தி.மு.க. அரசு.
நம்முடைய கட்சி அலுவலகம் எனும் கோவில் சேதம் அடைந்ததற்கு திமுக தான் காரணம். கள்ளக்குறிச்சி கலவரத்திற்கும் தி.மு.க.வே காரணம். இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் காவல்து றையானது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நீதிபதியே வினவும் அளவிற்கு உள்ளது இந்த தி.மு.க. அரசு. இப்படி சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்ததற்கு தி.மு.க ஆட்சி தான் காரணம்.
எங்கள் கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். காவல்துறையினர் தி.மு.கவுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் தக்க சமயத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.
தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. எந்த வேலையை எடுத்தா லும் லஞ்சம் தான் கேட்கப்படுகிறது.
திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். டெல்லியில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வின் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் மட்டும் தான் அழைப்பு வந்தது. மற்ற யாருக்கும் வரவில்லை.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற கணக்கில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு அனைத்து தொகுதிகளையும் வெல்வோம்.தற்போது அரசு கொண்டு வந்துள்ள மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் இன்னும் கடுமையாக முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சூலூர் எம்.எல்.ஏ. வி பி கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அ.தி.மு.க பொள்ளாச்சி நகர செயலாளருமான கிருஷ்ணகுமார், மாவட்ட அவை தலைவர் வெங்கடாசலம், அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்.எ.சக்திவேல், ஜேம்ஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.