ஓட்டப்பிடாரம் அருகே விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
- அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் கீழமுடிமன், வெள்ளாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி நீர்வடிப்பகுதிகளில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் ஆய்வு
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, நீர்வடிப்பகுதிகளில் உள்ள 24 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள், 39 விவசாயிகளுக்கு தார்ப்பாய்களும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 24 பயனாளிகளுக்கு 24 தையல் எந்திரங்கள் என 87 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்து கால்வாய் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
91 நீர்வடிப்பகுதி
குழுக்கள்
அப்போது கலெக்டர் செந்தில் ராஜ் கூறிய தாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 91 நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மொத்தம் ரூ.2 கோடியே 67 லட்சம் நிதியில் தடுப்பணை அமைத்தல், ஊரணி சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அமிழ்வுக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும் ரூ.ஒரு கோடி 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகளுக்கு அறிவுரை
தொடர்ந்து அவர், சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீரமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய் ஓரங்களிலும், அமிழ்வுக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்தவும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படும் மினி பாரஸ்ட் காடுகள் மற்றும் நர்சரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை திட்ட அலுவலரும், வேளாண்மை இணை இயக்குநருமான பழனிவேலாயுதம், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் சாந்திராணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வேளாண்மை உதவிப் பொறியாளர் தமிம்அன்சாரி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் முத்துராமன், வெண்ணிலா மற்றும் சில்லாநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, கீழமுடிமண் நீர்வடிப்பகுதி குழுத்தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.