ஆலங்குளம் அருகே பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
- மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
- போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பேசினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் ஆந்திராவில் சி.பி.எப். நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு உதவிடும் வகையில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக உதவி செய்துள்ளார்.
நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எப். இந்தியா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆல்வின் பாலன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சி.பி.எப். நிறுவனத்தின் சேர்மன் போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினார்.
இந்த விழாவில் சி.பி.எப். நிறுவனத்தின் துணை சேர்மன் குவான் சைபிரேம், சி.பி.எப். நிறுவனத்தின் தலைவர் சிரபோங்க் பொங்சா, துணை தலைவர் சைரட் அன்சரி பைக்கான், சீனியர் துணை தலைவர் சித்திசாய் சீஹோ, ஆந்திரா விற்பனை பிரிவு துணை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தி ஜான்சி ராணி வரவேற்றார். பள்ளியில் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பள்ளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.