கோவையில் அண்ணாமலை தோல்வி அடைய முக்கிய காரணங்கள் என்ன?
- அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
- பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.
கோவை:
தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு மண்டலத்தின் தலைநகர் போல் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரான கோவை எந்தவொரு பொதுத்தேர்தல் வந்தாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நகரமாக மாறி விடுகிறது.
இதற்கு காரணம் நடந்து முடிந்த பல தேர்தல்களும், தற்போது நடந்துள்ள 18-வது பாராளுமன்ற தேர்தலுமே சாட்சி. கடந்த பல ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வந்தது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றி தான் முக்கிய காரணம் ஆகும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அ.தி.மு.க.வும், 1-ல் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.
அதன்பிறகு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கவனம் முழுக்க கோவை பக்கம் திரும்பியது. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன்பலனாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவையை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை தி.மு.க.வே பிடித்தது.
அதைத்தொடர்ந்து தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட உள்ளதை முன்கூட்டியே அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை அமைத்தார்.
பல ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வின் கூட்டணிகளிடமே இருந்தது. இந்த முறை எதிரணியான பா.ஜ.க. கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக கோவையை கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து தி.மு.க. கேட்டுப்ெபற்றது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. கோவையில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காண தி.மு.க. தயாரானது.
தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்கள் பலர் முட்டிமோத யாரும் எதிர்பாராத வகையில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அறிவிக்கப் பட்டதும் தி.மு.க.வின ரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேர்ந்தவர். அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட இவர் வலுவான வேட்பாளர் இல்லை, சாதாரண வேட்பாளரை நிறுத்தி விட்டனர் என்றெல்லாம் பேசப்ப ட்டது.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மக்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தவர். ஏற்கனவே பழக்கப்பட்ட முகம் என்பதால் எளிதில் மக்களை அடைந்து விடுவார் என எண்ணினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து வந்த அவர் எதிரணியின் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். இதுவும் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று கருதினார்.
மு.க.ஸ்டாலினின் வியூகத்தை உணர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கணபதி ராஜ்குமாருடன் கைகோர்த்தனர். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமியுடன் கூடுதலாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் களமிறக்கப்பட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி அவர் கோவையிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொண்டார். அவரது பிரசார வியூகமே புது விதமாக இருந்தது.
ஓட்டுக்களை கொத்து, கொத்தாக அள்ளுவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இதற்காக தொழில்துறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கடைசி கட்ட பிரசாரத்தை கோவையில் தான் அமைத்திருந்தார்.
தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றச் செய்தார். இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு வியூகங்கள் தான் இன்று கோவை தொகுதியில மாபெரும் வெற்றியை தி.மு.க.வு க்கு பெற்று தந்துள்ளது.
ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்ற பெயர் கோவை முழுக்க எதிரொலிக்க அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் 3 முறை பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க.வினர் சற்று தடுமாற வெற்றி நமக்கு தான், தைரியமாக பணியாற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.
தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். வெற்றி உறுதி என்று நிர்வாகிகள் சொன்னதும் அனைவரையும் அவர் பாராட்டினார்.
இவ்வாறு பல்வேறு அதிரடி வியூகங்கள் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலையை வீழ்த்தியே விட்டார். 28 ஆண்டுகளுக்கு பின் கோவை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
இதற்கிடையே அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.
கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என பலரும் பிரசாரம் மேற்கொள்ள எப்படியும் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார் என்றே பா.ஜ.க.வினர் கருதி வந்தனர். ஆனால் தி.மு.க. வேட்பாளரிடம் அண்ணாமலையை தோல்வியை தழுவி விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பஸ் பயண திட்டம் ஆகியவை தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டன. ஊரகப்பகுதியில் தி.மு.க.வுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.
2026 சட்டசபை தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்க மறுக்கும் பா.ஜ.க.வினர், தங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களின் பெரும்பாலானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அ.தி.மு.க. வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இதுவரை கோட்டை என வர்ணிக்கப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வை வசைபாடு கிறார்கள்.
இதேபோல நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க. 3-வது இடத்தையே பெற்றுள்ளது. இந்த தோல்வி அ.தி.மு.க. தொண்டர்களிடை யே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.