நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வுக்கு காரணம் என்ன? பொதுமக்கள் பீதி
- நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
- ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கொட்டாரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சேர்வை காரன்பட்டி, பாப்பான் குளம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
சுமார் 5 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்தி ரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் குலுங்கியது. ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
சில இடங்களில் பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் ஒரு அதிர்வு தென்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அவசரம், அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு 29-ந்தேதி செங்கோட்டை, புளியரை, வடகரை, அச்சன்புதூர், தென்காசி, சுரண்டை, வி.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது என்றனர்.
தற்போது 2 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நில நடுக்க மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை. ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.
குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர்.
அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான் இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.
நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.
எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.