காங்கயத்தில் மாயமான சிறுவனின் கதி என்ன? 10 நாட்களாக தேடும் போலீசார்
- பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
- தொடர்ந்து ரிதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம், காங்கயம், ஏ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் ரிதன் (3½) இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமானான். இது தொடர்பான புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை யாராவது கடத்தி சென்றுள்ளார்களாக அல்லது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வந்தனர். ஆனால் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.இதைத்தொடர்ந்து அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தேடி வந்தனர். இருப்பினும் வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனவே இந்த பணிக்காக வாய்க்காலில் விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவிரமாக தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் மீண்டும் ஏ.சி. நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தடி தொட்டிகள், புதர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும்படியான இடங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று காலை வரை சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. அவனது நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து ரிதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.