சென்னையில் வெள்ள அபாயத்தை தடுக்க ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகள் என்ன?
- திடக்கழிவு மேலாண்மையை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
- 2026-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
சென்னையில் வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்தக் குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ.திருப்புகழ் சமர்ப்பித்தார். 690 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களுக்கு நீர் வந்து செல்லும் பாதைகளை உருவாக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்ளிட்ட 14 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வெளியேறும் வழிதடங்களை உறுதி செய்யும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தினால் சென்னையில் மழை நீர் தேங்காது. மழைநீர் வடிகால் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
போரூர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், திரு.வி.க. நகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை தொடர் பணிகளாக மேற்கொள்ள வேண்டும்.
போரூரில் இருந்து வெள்ளநீர் வெளியேறும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் வெள்ளநீர் வெளியேறும் பாதையை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
இறுதி அறிக்கையில் 12 அத்தியாயங்கள் உள்ளன. அதில் 365 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. ஆலோசனைக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த பிறகு சென்னையில் 11 இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், 460 நாட்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கையாலும், அரசு எடுத்த நடவடிக்கையாலும் வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.