குண்டாறு அணைக்கு மேல் ஆபத்தான பயணத்தை தடுக்க அமைக்கப்பட்ட கதவை அகற்றிய மர்ம நபர்கள் யார்?-அதிகாரிகள் விசாரணை
- நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
- உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
செங்கோட்டை:
குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள நெய் அருவி மற்றும் தனியார் அருவிகளுக்கு செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குண்டாறு அணைப்பகுதிக்கு மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட அந்த கதவை மர்ம நபர்கள் அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.