மேட்டுப்பாளையத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை
- தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது.
- சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
அடர்ந்த மலை பகுதியாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.
இதனிடையே இந்த வனப்பகுதியில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமிக்க தாசம்பாளைத்தில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை திடீரென்னு தடுப்பணையில் படுத்தவாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் யானை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யானை தண்ணீரில் படுத்தவாறு உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதால், சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்