உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே குளத்தில் குதூகலமாய் குளியலிட்டு மகிழும் காட்டு யானைகள்...

Published On 2024-09-15 09:17 GMT   |   Update On 2024-09-15 09:17 GMT
  • 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.
  • குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செங்கோட்டை:

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், அந்த வனவிலங்குகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை, பண்பொழி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் கீழே இறங்கி பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களாக செங்கோட்டையை அடுத்த பண்பொழி பகுதியில் யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.

தொடர்ந்து இன்று காலை அந்த 2 யானைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு சென்று ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன. அவை குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் ஊர் பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அவற்றால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News