தோட்டத்திற்குள் புகுந்து கால்நடை தீவனங்களை ருசித்த காட்டு யானைகள்
- வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன.
கவுண்டம்பாளையம்:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆனைக்கட்டி, மாங்கரை, தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
துடியலூரில் இருந்து பன்னிமடை செல்லும் பகுதியில் கதிர்நாயக்கன் பாளையம் சாலையில் லட்சுமி நகர் பேஸ் 3-பகுதியை சேர்ந்தவர் மணி.
இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்குள்ள தோட்டத்து வீட்டில் அவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதுதவிர அங்கு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள், இந்த தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தன. யானைகள் வந்ததை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன. மேலும் அங்கு கால்நடைகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த உணவு பொருட்களை யானைகள் தின்று ருசித்தன.
இதை பார்த்து அதிர்ச்சியான வீட்டில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து உடடினயாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனால் நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீண்டும் யானைகள் ஊருக்குள் வந்து சேதத்தை ஏற்படுத்தி விடுமா? என்று அச்சத்தில் இருந்தனர்.