ஆடு-மாடுகளை கடித்து குதறும் வெறிநாய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
- விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
- கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு தாசில்தார்கள், வருவாய்த்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் ஏராளமானவை பலியாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊத்துக்குளி, அவினாசி, பொங்கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதை ஈடுகட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடவும், வனத்தில் இருந்து மான்கள் வெளியேறாத வகையிலும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அரசூர்-ஈங்கூர் உயர்மின் கோபுர திட்டத்தால் அவினாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகளை தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுவாக பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.
இழப்பீடு குறித்து தனித்தனி பட்டியல் வழங்கவும், வெளிப்படைத்தன்மை இருக்கவும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் ரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.