ஆதித்த சோழனின் சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படுமா?
- 3 அடி உயரம் கொண்ட சிற்பம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
- ஆதித்தசோழனின் சிற்பம் தெருவோர சன்னதியில் வைத்து வழிபடுவது கவலை அளிக்கிறது.
திருவாரூர்:
பிற்கால சோழர் பேரரசுக்கு அடிகோலியவர் விஜயாலய சோழன். இவரது மகன் ஆதித்ய சோழன். ஆதித்ய சோழனுக்கு கிபி 871 ஆம் ஆண்டில் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
பிற்காலச் சோழர்கள் கிபி 8ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி வந்தனர்.
இவர்களது காலத்தில் திருவாரூர், நாகை, நன்னிலம், தஞ்சாவூர், மன்னார்குடி, வலங்கைமான், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் கோயில்களை கட்டி நிலம் உள்ளிட்டவர்களை தானமாக வழங்கி உள்ளனர்.
அந்த வகையில் ஆதித்த மங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை அன்பில் செப்பேடு மற்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு நிலம் தானம் அளித்த அடிப்படையில் ஆதித்ய சோழன் சிற்பத்தையும் கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
காலப்போக்கில் கோயில் அழிந்து விடவே அச்சிற்பத்தை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தெருவோர சிறிய சன்னதியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
மூன்று அடி உயரம் கொண்ட சிற்பம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
தலைப்பகுதியில் சிறிய முடியுடன் கூடிய கவசம், காதுகளில் பத்திர குண்டலமும், கழுத்தணி களுடன் முகத்தில் முறுக்கு மீசையுடனும், கீழாடை அணிந்து, வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் கொண்டு நின்ற நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பம் ஒன்பதாம் நூற்றாண்டில் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.
பிற்கால சோழப்பேரரசுக்கு அடி கோலிய விஜயாலயன் மகன் ஆதித்யசோழனின் சிற்பம் தெருவோர சன்னதியில் வைத்து வழிபடுவது பொதுமக்களையும் தொல்லியல் நிபுணர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது.
வரலாற்று பாரம்பரி யமிக்க ஆதித்ய சோழனின் சிற்பத்தினை பிரத்தியேகமாக தனி அரங்கம் அமைத்து பொதுமக்களின் பார்வை க்கும் வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென தொல்லியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.