உள்ளூர் செய்திகள்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிய கட்டிடத்தின் முன்பாக பழைய கட்டிட காரைகள் அகற்றப்படாமல் உள்ளதை படத்தில் காணலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடிக்கப்பட்ட பழைய கட்டிட காரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-06-18 07:14 GMT   |   Update On 2023-06-18 07:14 GMT
  • விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
  • விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலுாரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அந்த அளவுக்கு மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூடமாக இது விளங்குகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகின்றது. அதன்படி விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News