உள்ளூர் செய்திகள்

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள்-கலசங்கள் உடைப்பு, ஆபரணங்கள் திருட்டு- மர்மநபர்கள் கைவரிசை

Published On 2023-05-23 09:46 GMT   |   Update On 2023-05-23 09:46 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
  • என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான இக்கோவில் அவினாசி நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதனால் தினமும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அண்மையில்தான் இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பூஜை முடிந்ததும் அர்ச்சகர்கள் கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் நடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கோவிலில் பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவிநாசிலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள மிகவும் கனமான தாராபாத்திரத்தை (அதாவது லிங்கத்தின் மேல் அபிஷேக திரவியம் படும் வகையில் இருக்கும் அமைப்பு) திருட முயற்சி நடந்துள்ளது. எனினும் அதை கழற்ற முடியாத நிலையில் அடுத்ததாக பிரதான கருவறையைச் சுற்றியுள்ள 63 நாயன்மார்களின் உடை வஸ்திரங்கள், சிறு கலசங்களை உடைத்து திருடவும் மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

அதேபோல் கோவில் உண்டியலையும் திருடர்கள் அசைத்துப் பார்த்துள்ளனர். எனினும் அதிலிருந்து எதையும் எடுக்க முடியவில்லை. மேலும் சுப்ரமணியர் சன்னதியில் வேல், சேவல் கொடி ஆகியனவும் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அது பற்றி தெரியவரும்.

கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று கண்டறிய கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் 63 நாயன்மார்கள் சிலை அமைந்துள்ள பகுதியில் சிமெண்ட்டால் அமைக்கப்பட்ட கோபுர கலசங்களை ஒவ்வொன்றாக உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதன்பிறகு கோவில் கருவறைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

வாலிபரின் உருவத்தை வைத்து அவர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரபலமான கோவிலில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியும் கவலையையும் அடையச் செய்துள்ளது. கோவிலில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மர்மநபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

இந்நிலையில் அவினாசி கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்ததும் போலீசார் கோவில் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். எந்தெந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர். அப்போது ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் ஜட்டி அணிந்திருந்ததுடன், கழுத்தில் மாலையும் அணிந்திருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரிக்கும் போது நேற்றிரவு அவினாசி கோவிலில் கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது. கொள்ளையடிப்பதற்காக ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர் அதன்பிறகு கீழே இறங்க முயற்சித்துள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. இதனால் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார். இன்று காலை போலீசார் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது.

கொள்ளை சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் இந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோவில் முன்பு குவிந்தனர். அவர்கள் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க வேண்டுமென போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோவிலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கோவிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News