உள்ளூர் செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல்- பெண் கவுன்சிலரின் கணவர் கைது

Published On 2022-12-31 10:41 GMT   |   Update On 2022-12-31 10:41 GMT
  • வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.

லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.

இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News