ஆம்பூரில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு- அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மறியல்
- துர்கா தேவி உடல்நிலை மோசமானது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாதனூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல். மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய் மனைவி துர்காதேவி (வயது 26), தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. இதனால் நர்சுகள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது துர்கா தேவி உடல்நிலை மோசமானது. இதனால் அவர் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. இதில் துர்கா தேவிக்கு அதிகபடியான ரத்தப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் சேலம் மற்றும் தருமபுரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த துர்கா தேவியின் உறவினர்கள், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து, ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.