மதுபோதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை
- தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
- அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது இறந்து தெரிய வந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் மதுபோதையை மறப்பதற்காக 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு ஊராட்சி கரையங்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (வயது 47) என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் நேற்று மறுவாழ்வு மையத்தின் பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சை மையத்தை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முருகேசன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிகிச்சை மைய உரிமையாளர் மணிகண்டன் (36), மேலாளர் வேல்மு ருகன்(38), பணியாளர்கள் ஷியாம் சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
முன்னதாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த சரண்ராஜ்(32), பிரபாகரன்(35), பாலமுருகன் (25) ஆகிய 3 பேரும் காயம்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.
மீதம் இருந்த 26 பேரில் 17 பேரை வேதாரண்யத்தில் உள்ள பல்நோக்கு சேவை கட்டிடத்துக்கும், 9 பேரை நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் வேதாரண்யம் உதவி கலெக்டர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொ டர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு 'சீல்' வைத்தனர்.
இந்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.