உள்ளூர் செய்திகள் (District)

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேனி மாவட்டத்திற்கு ரூ.317 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-11-25 05:02 GMT   |   Update On 2023-11-25 05:02 GMT
  • முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
  • சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேனி:

தேனியில் தொழில் முதலீட்டு மாநாடு 2024-ஐ முன்னிட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை பெருக்குவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு வரும் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு திட்டமிடப்பட்டு இம்மாநாடு நடைபெற உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சார்பாக, தேனி மாவட்டத்திற்கு ரூ.540 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது 35 நபர்களிடமிருந்து ரூ.479.12 கோடி முதலீடுகள் அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உற்பத்தி துறையில் 28 நிறுவனங்கள் ரூ.418.42 கோடி முதலீடு செய்வதற்கும், சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60.88 கோடி குறியீட்டினை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில் முனைவுகளையும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளையும் அதிக அளவில் ஊக்குவிக்க நமது மாவட்டத்தின் சார்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அதிக அளவு மானியம் தரக்கூடிய திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய முனைவோர்களுக்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காக உள்ள திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்வதற்கும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News